ரத்தம் கக்கிக் கொண்டிருந்தது ஜடாயு, அதன் மூச்சும் மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டிருந்தது. அப்போது ராமன் தன்னை நோக்கி வேக வேகமாய் வருவதைக் கண்டது. "ராமா, ஏற்கெனவே ராவணனால் வீழ்த்தப் பட்ட என்னை நீ கொல்ல நினைக்கின்றாயா? காப்பாற்ற லட்சுமணனும் அருகில் இல்லாமல், ராவணனால் கொண்டு போகப் பட்ட சீதையைக் காப்பாற்ற நான் ராவணனோடு பெரும்போரிட்டேன். இங்கே கிடக்கின்ற அம்புகள், ஒடிந்து இருக்கும் வில், என்னால் உடைக்கப் பட்ட அவன் தேரின் பாகங்கள், அதோ கிடக்கின்றதே, ராமா, அதோ பார்ப்பாய்! ஆனாலும் இறுதியில் என் இறக்கைகளை அவன் வெட்டி வீழ்த்தி விட்டான். சீதை ராவணனால் கவர்ந்து செல்லப் பட்டாளே! " என்று சொல்லிவிட்டு ஜடாயு, பெருமூச்சு விடுவதைக் கண்ட ராமர் மனம் நெகிழ்ந்தது. "ஐயோ, நான் பெரும்பாவி, அரசுரிமை இழந்தேன், தாய், தந்தையரோடு சேர்ந்திருக்க முடியாமல் காட்டுக்குச் செல்லுமாறு பணிக்கப் பட்டேன், இங்கே மனைவியையும் பறி கொடுத்தேன், துணை நின்ற ஜடாயுவும் இப்போது இறக்கும் தருவாயில்! என்னே என்னுடைய துரதிருஷ்டம்! இதன் காரணமாய் நான் கடலுக்குச் சென்றால் கூட அந்தக் கடலும் வற்றுமோ? எத்தகைய துரதிர்ஷ்டக் காரன் நான்!" என்று புலம்பி விட்டுக் கீழே அமர்ந்து ஜடாயுவைத் தடவைக் கொடுத்து, ஆறுதல் சொன்னதோடு, " என் சீதை எங்கே சென்றாள்?" என்றும் கேட்கின்றார். ஜடாயு சொல்கின்றது: "தன் மாயையால், புயல், இருள் சூழ்ந்த வானத்தை உருவாக்கி விட்டு, ராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டு தென் திசையில் சென்றான். அவன் கவர்ந்து சென்ற நேரம் "விந்தை" எனச் சொல்லப் படும். சாத்திரங்கள் கூறியவற்றின் படி, அந்த நேரத்தில் ஒருவனுடைய உரிமைப் பொருள் வேறொருவனால் கவர்ந்து செல்லப் பட்டால், அதன் விளைவுகள் கவர்ந்தவனைச் சென்றடையும். ராவணன் இதை அறியமாட்டான் போலும்!" என்று சொல்லிவிட்டுப் பின்னர், மிக்க சிரமத்துடன், "இந்த ராவணன், மஹரிஷி, விஸ்ரவஸின் மகன், குபேரனின் சகோதரன்!' என்று சொல்லிக் கொண்டே உயிர் நீத்தது.
லட்சுமணனிடம் ஜடாயுவின் மறைவுக்கு வருந்திய ராமர், அவனைக் கொண்டு சிதை மூட்டச் செய்து, ஜடாயுவிற்கு இறுதிச் சடங்குகளை நடத்தி முடித்தார். பின்னர் இருவரும் காட்டுப் பகுதிகளைக் கடந்து மேலே செல்லும்போது, ஒரு இடத்தில் ஒரு குகைக்கு அருகே, பயங்கர உருவம் படைத்த ஒரு அரக்கி காணப்பட்டாள். லட்சுமணனைக் கண்டதும் அவள் ஓடி வந்து கட்டி அணைத்து, " என் பெயர் அயோமுகி, நான் உன் அழகால் கவரப் பட்டேன், நாம் திருமணம் செய்து கொள்வோம்!" என்று சொல்கின்றாள். லட்சுமணன் அவளை அங்கஹீனம் செய்ய அவள் அலறிக் கொண்டு ஓடுகின்றாள். பின்னர் பயணத்தை இருவரும் தொடரும்போது, காடே அதிரும் சப்தம் கேட்கின்றது. எதிரே தோன்றினான் ஒரு விசித்திர உருவம் படைத்த மனிதன். மனிதனா அவன்? வாய் வயிற்றிலே! தலையோ, கழுத்தோ காணவே இல்லை. தன் பெயர் "கபந்தன்" என்றும், ராம, லட்சுமணர்களைத் தான் விழுங்கப் போவதாயும் சொன்ன அவன் (நீண்ட கைகளுடன் காணப்பட்ட) ராம, லட்சுமணர்களை இறுகத் தன் கைகளால் பிடிக்க, அவர்களை விழுங்கப் போவதாய்ச் சொல்கின்றான். ராமர், லட்சுமணனுக்குத் தைரியம் சொல்லிவிட்டு, பின்னர் இருவருமாய் அந்த அரக்கனின் கைகளை வெட்டித் தள்ள அரக்கன் கீழே விழுந்தான். "யார் நீங்கள்?" என ராம, லட்சுமணர்களை வினவ, அவர்கள் தங்கள் கதையைச் சொல்கின்றனர். தன் கதையையும் சொல்கின்றான் கபந்தன். வேண்டிய உருவம் எடுக்கத் தக்க கந்தர்வன் ஆகிய தான் "ஸ்தூலசிரஸ்" என்ற ரிஷியைத் துன்புறுத்தியதால் அவரால் சாபம் கொடுக்கப் பட்டு, விமோசனம் வேண்டிய காலத்தில், ராமன் வந்து விமோசனம் கொடுப்பான், அவரால் உன் உடல் தகனம் செய்யப் படும்போது முந்தைய உருவைத் திரும்ப அடைவாய்!எனக் கூறியதாய்ச் சொல்கின்றான். தன்னைத் தகனம் செய்யும்படியும், தான் பழைய உருவை அடைந்த பின்னர், ராமருக்கு வேண்டிய உதவியைத் தான் செய்வதாயும், சீதையைக் காப்பாற்றும் விஷயத்தில் ராமருக்கு யார் உதவுவார்கள் என்பதும் தனக்குத் தெரியும் எனவும் சொல்லவே, அவ்வாறே, கபந்தன் கூறியவாறே அவன் உடலைக் குழியில் இட்டு சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் தகனம் செய்கின்றனர்.
கபந்தன் எரிந்த சிதையில் இருந்து தூய ஆடைகள் அணிந்தவனாய்த் தோன்றி அப்போதே அங்கே தோன்றிய தெய்வீக விமானத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, ராமரைப் பார்த்துச் சொன்னான்:" உன் மனைவியை நீ இழந்து இப்போது துன்புற்று இருப்பதை போல் தன் மனைவியையும், அனுபவித்து வந்த ராஜ்யத்தையும் துறந்து வாழும் ஒருவனை நீ உனக்குத் துணையாகக் கொள்வாயாக. அப்படிப்பட்ட ஒருவன், சுக்ரீவன் என்ற வானரத் தலைவன். இந்திரனின் மகன் ஆகிய வாலி என்பவனின் சகோதரன். வாலியினால் துரத்தப் பட்டு, பம்பா நதிக்கரையில், ரிச்யமுகம் என்னும் மலையில் சில வானரங்களோடு வசிக்கின்றான், தன்னந்தனியாக இப்போது. மிக்க தைரியசாலி, பலவான். சீதையைத் தேடும் விஷயத்தில் அவன் உனக்கு உதவி புரிவான். விதியை யாராலும் வெல்ல முடியாது. ஆகவே நீ சூரியனின் அம்சம் ஆன சுக்ரீவனைச் சந்தித்து, அக்னி சாட்சியாக அவன் நட்பை ஏற்றுக் கொள்வாய். நினைத்தபோது நினைத்த உருவம் எடுக்கும் வல்லமை பெற்ற அவன், உன் மனைவி, மேருமலையின் உச்சியில் இருந்தாலும் சரி, பாதாள லோகத்தின் மூலையில் இருந்தாலும் சரி, கண்டு பிடித்துக் கொடுப்பான். மேலும், ராமா, கேள், இந்தப் பம்பை போகும் வழியில், பல புனிதமான இடங்கள் இருக்கின்றனன். அங்கிருந்த முனிவர்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்த "சபரி" என்னும் பெண் துறவி அங்கே வசிக்கின்றாள். உன்னைக் காணவே அவள் உயிர் தரித்திருக்கின்றாள். உன்னைக் கண்டதும் அவள் மோட்சத்தை அடைவாள். பம்பைக்கு எதிரிலேயே அந்த ரிச்யமூகம் இருக்கின்றது. அங்கே தான் சுக்ரீவன் வாழ்கின்றான். நான் விடை பெறுகின்றேன்." என்று சொல்லிவிட்டுக் கபந்தன் விடை பெற்றான். ராம, லட்சுமணர்கள் கபந்தன் குறிப்பிட்ட பாதையில் சென்று, பம்பையின் மேற்குக் கரையை அடைந்தனர். அங்கே சபரியின் ஆசிரமம் இருந்தது.
வைதீஸ்வரன் கோவிலில் ஒரு ஜடாயு குண்டம் இருக்கிறது. சம்பந்தம் உண்டா?
ReplyDeleteதிவா அவர்கள் கேட்ட கேள்விக்கு இங்கயே பதில் போடுங்க.
ReplyDelete"திவாவுக்கு பதில்"னு ஒரு பதிவு போட்டு பதிவு எண்ணிக்கையை கூட்டிக்க வேணாம், இப்பவே சொல்லிட்டேன் ஆமா! :P