
ராவணனைத் தாம் அழிக்கக் கூடிய வல்லமை இருந்தும், இது ராமன் செய்ய வேண்டிய ஒன்று எனத் தெளிந்த அனுமன் அசோகவனத்தைக் கண்டதும் இந்த வனத்தில் இதுவரை தேடவில்லை எனக் கண்டு உள்ளே நுழைந்தான். யார் கண்ணிலும் படாமல் தேட வேண்டிய கட்டாயத்தினால், தன் உருவத்தை மிக, மிகச் சிறு உருவமாக்கிக் கொண்டிருந்த அனுமன் மரத்திற்கு மரம் தாவிக் கொண்டே அந்த வனம் பூராவும் தேடினார். ஓரிடத்தில் ஓர் அழகான தாமரைக் குளத்தைப் பார்த்துவிட்டு, ஒருவேளை சீதை இந்த வனத்தில் இருந்தால் இந்தக் குளத்திற்கு வரலாம் என எண்ணியவாறே அந்தக் குளக்கரையில் ஓர் உயர்ந்த மரத்தின் மீது அமர்ந்த வண்ணம் சுற்றுமுற்றும் பார்த்தார். அப்போது அங்கே பவளத்தினால் ஆன படிகளைக் கொண்டதும், தங்கத்தினால் உள்ள மேடைகளைக் கொண்டதும், மிக, மிக உயரமானதுமான ஒரு மண்டபத்தைக் கண்டார் அனுமன். அந்த மண்டபத்திற்கு அருகே, ஆஹா, என்ன இது? யாரிவள்? இத்தனை அதிரூப செளந்தர்யவதியான பெண்ணும் உலகிலே உண்டா? ஆனால், என்ன இது? ராகு பிடித்துக் கொண்ட சந்திரன் போல் அவள் முகம் ஒளியிழந்து காணப்படுகின்றதே? ஏன், இவள் ஆடை இத்தனை அழுக்காயிருக்கின்றது? இது என்ன, இந்தப் பெண்மணியைச் சுற்றி இத்தனை அரக்கிகள்? ஆனாலும் இவளைச் சுற்றிலும் ஒரு தெய்வீக ஒளி வீசுகின்றாற்போல் இருக்கின்றதே? இவள் ஆடையின் நிறத்தின் மஞ்சளைப் பார்த்தால், ரிச்யமூக பர்வதத்தில் சீதை வீசி எறிந்த ஆடையின் நிறத்தை ஒத்திருக்கின்றதே? இவளின் ஆபரணங்களின் இந்தப் பகுதியும், சீதை வீசி எறிந்த ஆபரணங்களின் மற்றொரு பகுதியாய்த் தெரிகின்றதே? இவள் முகத்தில் தெரியும் கரைகாணாச் சோகத்தின் காரணமும் புரிகின்றது. இவள் தான் சீதை. ராமனைப் பிரிந்து இருப்பதால் இவ்வாறு சோகமாய் இருக்கின்றாள். ஆஹா, ராமனின் சோகத்தின் காரணமும் புரிகின்றது. இத்தகைய சீதையைப் பிரிந்த ராமன் சோகமாய்த் தான் இருக்க முடியும், எவ்வாறு இன்னமும் உயிர் வைத்திருக்கின்றான் என்பதே பெரும் சாதனை தான் என்று இவ்வாறெல்லாம் ஆஞ்சநேயன் நினைத்தார்.
சீதை இத்துணை மேன்மை வாய்ந்தவளாய் இருந்தும் இத்தகைய துன்பத்துக்கு ஆளாகி இருக்கின்றாள் என்றால் விதி வலியது என்ற முடிவில் மாற்றம் ஏதும் இல்லை. எவராலும் விதியை வெல்ல முடியாது என்பதிலும் வேறு கருத்து இல்லை. ராமனை நினைத்துக் கொண்டு அவனுக்காகவே இந்தப் பெண்மணி தன் உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றாள், என்றெல்லாம் நினைத்துக் கொண்டு மேலே என்ன செய்யலாம் என்று அனுமன் யோசித்தார். இரவிலே அதுவும் பாதி ராத்திரியிலே சீதைக்கு முன்னால் எவ்வாறு போய் நிற்பது, என்ன வழி? என்றெல்லாம் அனுமன் யோசிக்கும்போதே இரவு கடந்து காலையும் வந்தது. அரண்மனையில் அரசன் ஆன ராவணனைத் துயிலெழுப்பும் ஓசையும், வேத கோஷங்களும், மந்திர கோஷங்களும், பூஜை வழிபாடுகளும் கலந்து கேட்க ஆரம்பித்தது. ராவணன் துயிலெழுந்தபோதே சீதையின் நினைவோடே எழுந்தான். சீதையைச் சந்தித்து அவள் சம்மதம் பெற்றே தீரவேண்டும் என முடிவெடுத்தான். அரக்கிகள், மற்ற தன் பரிவாரங்கள் சூழ ராவணன் அசோக வனத்திற்குச் சென்று சீதையைச் சந்திக்க ஆயத்தம் ஆனான். அனுமன் மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த போதே, ராவணன் அசோக வனத்தினுள் நுழைந்தான். அவன் தோற்றத்தைக் கண்டு அனுமன் வியந்தான்

ராவணன் சீதையைக் கண்டதும் முதலில் மிக மிக அன்பாய்ப் பேசத் தொடங்கினான். "என் அன்பே, சீதை, என் மீது அன்பு காட்டு. மாற்றான் மனைவியைக் கவர்வது என் போன்ற அரக்க குலத்துக்கு உகந்த ஒரு செயலே ஆகும். எனினும் உன் சம்மதம் இல்லாமல் உன்னை நான் தொட மாட்டேன். ஒற்றை ஆடையில் நீ இவ்வாறு அமர்ந்து தனிமையில் துக்கத்தில் ஆழ்ந்து கிடப்பது ஏற்றதே அல்ல. என்னை ஏற்றுக் கொண்டாயானால் அனைத்து இன்பங்களும் உன் வசமே. ராமனிடமிருந்து நீ வந்துவிட்டாய் பெண்ணே, இனி அதையே நினைந்து, நினைந்து துயரம் கொள்வதில் பயனில்லை. உன்னைப் பார்த்தால் பிரமன் கூட படைப்பை நிறுத்திவிடுவானோ என எண்ணுகின்றேன். இத்தகைய செளந்தர்யவதியான நீ என் ராணியாகி விட்டால்? இந்த உலகம் முழுதும் சென்று நான் வென்ற அத்தனை சொத்து, சுகங்களையும் உன் தந்தையான ஜனகனுக்கு உரியதாக்குவேன். என்னளவு பலம் கொண்டவனோ, எனக்கு நிகரானவனோ இவ்வுலகில் யாருமே இல்லை. எனக்கு நீ கட்டளை இடு, நான் நிறைவேற்றுகின்றேன். ராமன் உன்னை நினைத்துக் கொண்டிருப்பான் என்பதே நிச்சயம் இல்லை. இங்கு வந்து உன்னை மீட்டுச் செல்வான் எனக் கனவு காணாதே!" என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் காட்டுகின்றான்.
சீதை அவன் பேசியதைக் கேட்டுவிட்டு, பின்னர் ஒரு புல்லை எடுத்து அவனுக்கும், தனக்கும் இடையே போடுகின்றாள். இதன் தாத்பரியம் ராவணனை அவள் ஒரு புல்லுக்குச் சமம் என மதித்தாள் என்பது மட்டும் இல்லை, தீய எண்ணத்துடன் தன்னிடம் பேசும் ஒரு அந்நிய ஆடவனிடம் நேரிடையாகப் பேச அவள் இஷ்டப் படவில்லை, ஆகையால் தங்களுக்கிடையே ஒரு தடுப்பை உண்டுபண்ணிக் கொண்டே பேசுகின்றாள் என்பதே உண்மையான அர்த்தம். சீதை சொல்கின்றாள்:" என்னை விட்டுவிடு, என்னை விரும்புவது என்பது உனக்கு அழிவையே தரும். உன் மனைவிகளோடு கூடி வாழ்வதில் உள்ள சுகத்தை விட இதில் என்ன மேலானதைக் கண்டாய்? இங்கு உனக்கு நல்வழி புகட்டுபவர்களே இல்லையா? உன் பொருட்டு இந்த ராஜ்யமே அழிந்துவிடுமே? உன் சக்தியோ, செல்வமோ என்னைப் பணிய வைக்க முடியாது. ராமனைப் பற்றி நீ அறிய மாட்டாய். அவர் பலத்தைப் பற்றி எண்ணவில்லை நீ. அத்தகைய ராமனை மணந்த நான் உன்னை மனதாலும் நினைப்பேனா? ராமனும், அவர் தம்பி லட்சுமணனும் ஏவப் போகின்ற அம்புகளால் உன் இலங்கையே அழியப் போகின்றது. அவர்கள் இருவரும் இப்போது சும்மா இருப்பதாய் எண்ணாதே. புலிகள் இருவரும். அந்த இரு புலிகளையும் நாய் போன்ற உன்னால் எப்படி எதிர்க்க முடியும்?" என்று கோபமாய்ப் பேசவே ராவணன் அமைதி இழந்தான்.
"நான் அமைதியாய்ப் பேசுகின்றேன் என நினைத்துக் கொண்டு நீ என்னை அவமதிக்கின்றாய். உன் மீதுள்ள அன்பினால் நான் இப்போது கோபத்தை வெளிக்காட்டாமல் இருக்கின்றேன். உன்னைக் கொல்லாமலும் விடுகின்றேன். உனக்கு நான் பனிரண்டு மாதங்கள் அவகாசம் அளித்தேன். ஆனால் இன்னும் நீ பதில் சொல்லவில்லை. பனிரண்டு மாதங்கள் முடியவும் இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. அதன் பின் நீ எனக்கு உரியவளாய் ஆகிவிட வேண்டும். இல்லை எனில், நீ கண்ட துண்டமாய் வெட்டப்பட்டு, சமைக்கப் பட்டு அனைத்து அரக்கர்களுக்கும் உணவாகிவிடுவாய்!" என்று கோபத்துடன் சொல்கின்றான். மேலும், மேலும் சீதை மறுத்துப் பேசவே, அவளுக்குக் காவல் இருந்த சில அரக்கிகளைப் பார்த்து ராவணன், சொல்கின்றான்:"சீதை விரைவில் எனக்கு இணங்க வேண்டும். நல்ல வார்த்தைகளால் முடியவில்லை எனில் கடுமையான அணுகுமுறைகளால் மாற்றுங்கள்"என்று சொல்ல அவன் பட்டமகிஷியான மண்டோதரியும், மற்றொரு மனைவியும் வந்து அவன் கடுமையைத் தணிக்க முயன்றனர். அவர்கள் பேச்சால், சற்றே அமைதி அடைந்த ராவணனும், அரண்மனைக்குப் பூமி அதிர, நடந்து சென்றான். காவல் இருந்த அரக்கிகள் ஏகஜடை, ஹரிஜடை, விகடை, துர்முகி, போன்றவர்கள் ராவணனின் பெருமைகளை சீதைக்கு எடுத்துக் கூறி அவள் மனத்தை மாற்றும் முயற்சிகளில் இறங்க ஆரம்பித்தனர். சீதை அவர்கள் பேச்சுக்கு இணங்கவில்லை.

அப்போது அதுவரை அங்கே உறங்கிக் கொண்டிருந்த திரிஜடை என்னும் அரக்கி விழித்து எழுகின்றாள். மற்ற அரக்கிகளைப் பார்த்து நமக்கு அழிவுகாலம் வந்துவிட்டது. சீதையின் கணவனுக்கும், அவன் சிறப்புக்கும் புகழ் சேரப் போகின்றது. அத்தகைய கனவொன்றை நான் கண்டேன், ஆகவே பெண்களே, உங்கள் தொல்லையை நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று சொல்ல, மற்ற அரக்கிகள் திரிஜடையிடம் உன் கனவு என்னவென்று தெளிவாய்ச் சொல் எங்களிடம் என்று கேட்கின்றார்கள். திரிஜடையும் சொல்கின்றாள்:"பொழுது விடியும் முன் காணும் கனவு பலிக்குமெனச் சொல்வதுண்டு. நான் கண்டது, வெள்ளைக்குதிரைகளால் இழுக்கப்பட்ட தங்கத் தேரில் ராமனும், லட்சுமணனும் இலங்கைக்கு வந்து, சீதையை மீட்டுச் செல்கின்றனர். மிகவும் மகிழ்ச்சியோடு புஷ்பக விமானத்தில் அவர்கள் செல்வதைக் கண்டேன். ஆனால் மாறாக ராவணன் தலை மொட்டை அடிக்கப் பட்டு, எண்ணெய் பூசப் பட்டு புஷ்பகத்தில் இருந்து கீழே தள்ளப் பட்டான். கறுப்பாடை அணிந்திருந்தான். தென் திசை நோக்கிச் சென்று கொண்டிருந்தான் ஒரு கழுதை மீது ஏறி, அதே போல் ராவணனின் மகன், தம்பியான கும்பகர்ணன் ஆகியோரும் அவ்வாறே சென்றனர். சிவப்பாடை அணிந்த ஒரு பெண்ணால் அவர்கள் அனைவரும் இழுத்துச் செல்லப் பட்டனர். ராவணன் தம்பி விபீஷணன் மட்டுமே வெண்மை ஆடை தரித்து சந்தனம் பூசப்பட்ட உடலுடன் யானை மீது அமர்ந்திருந்தான். இந்த லங்காபுரியே மூழ்கிவிடுவது போலவும், தீப்பற்றி எரிவது போலவும், மாட, மாளிகைகள், கூட, கோபுரங்கள் கீழே விழுவது போலவும் கனவு கண்டேன். சகல லட்சணங்களும் பொருந்திய சீதைக்கு ஒரு துன்பமும் நேரப் போவதில்லை." என்று கூறவே, சந்தோஷம் கொண்ட சீதை, "அத்தகைய ஒரு நிலை எனக்கு நேரிட்டால், நிச்சயமாய் உன்னைப் பாதுகாப்பேன்," என்று சொல்கின்றாள். எனினும் ராவணனின் அச்சுறுத்தல்களும், மற்ற அரக்கிகளின் தொந்திரவுகளினாலும் மனம் நைந்து போன சீதை தன் தலையில் கட்டி இருந்த ஒரு கயிற்றினால் தான் தூக்குப் போட்டுக் கொள்ளலாமா என யோசிக்கின்றாள். உடலிலும் இடது கண்கள், தோள்கள் துடித்து நற்சகுனத்தையும் காட்டவே, சற்றே யோசிக்கின்றாள்.
அப்போது எங்கே இருந்தோ தேவகானம் போல் ராம நாமம் கேட்கின்றது.
"ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்"
அனுமன் மெல்ல, மெல்ல மெல்லிய குரலில் சொல்லத் தொடங்கினான், ராமனின் கதையை.
<
அன்பு சகோதரி,
ReplyDeleteஇன்றுதான் தங்கள் வலைப்பூவிற்கு வந்தேன்..
ராமாயணத்தை எளிய தமிழில் அழக்காக சொல்லியிருக்கிறீர்கள்.. மிக நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்..
இனி நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகளை பொறுமையாக வாசிக்கிறேன்..