
சீதை ராவணனால் அபகரிக்கப் பட்டது நிச்சயம் தான் என்பதை உறுதி செய்த சம்பாதி, கடலைத் தாண்டிச் சென்று தான் சீதை இருக்கும் இடத்தை அடையமுடியும் எனவும் கூறுகின்றது. ராவணனைப்பற்றிய மற்ற விபரங்களையும் கூறிய சம்பாதி, அவன் பெரும் வீரன், குபேரனின் சகோதரன், இலங்கையின் அதிபன், அவனுடைய அந்தப் புரத்தில் தான் சீதை கடும் காவலில் வைக்கப் பட்டிருக்கின்றாள். நீங்கள், உங்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, எப்படியாவது முனைந்து கடல் கடந்து சென்று சீதை இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து ராமனிடம் தெரிவியுங்கள் என்றும் யோசனை கூறியது சம்பாதி. மேலும் சம்பாதி கூறியதாவது: "இது இவ்வாறு நடக்கும் என முன்பே நான் அறிவுறுத்தப் பட்டேன். நிசாகரர் என்னும் மஹரிஷி என்னிடம் ராமருக்கு உதவக் கூடிய ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லும் வாய்ப்பு உனக்குக் கிட்டும். அப்போது உனக்கு இந்தப் பொசுங்கிய இறக்கைகள் மீண்டும் முளைக்கும் என்று கூறினார். என் பணி இது தான். நான் செவ்வனே செய்து முடித்து விட்டேன்." என்று சம்பாதி கூறவும், அனைவரும் அதிசயிக்கும் வகையில் சம்பாதியின் இறக்கைகள் முளைத்தன. சம்பாதியிடம் இருந்து உத்தரவு பெற்றுக் கொண்டு வானர வீரர்கள் அனைவரும் சமுத்திரக் கரையை அடைந்தனர். கடலின் தூரத்தையும், கண்ணுக்கெட்டாத தூரம் பரந்து விரிந்து கிடந்ததையும் கண்ட அவர்கள் மனம் தளர்ந்தனர். அப்போது அங்கதன், யார் யாருக்கு எவ்வளவு தூரம் தாண்ட முடியும் என்று சொல்லுங்கள் எனக் கேட்டான்.
ஓவ்வொருத்தரும் சொன்ன பதிலில் திருப்தி அடையாத அங்கதன், கடைசியில் என்னால் கடலைத் தாண்ட முடியும், சென்று விடுவேன், ஆனால் திரும்பி எப்படி வருவது? திரும்ப வர அதே பலம் என்னிடம் இருக்கிறதாய்க் காணவில்லையே? என்று குழப்பம் அடைந்தான். அதைக் கேட்ட அங்கிருந்த கரடிகளின் தலைவன் ஆன ஜாம்பவான், "அங்கதா, போக மட்டும் அன்றி, திரும்பி வரவும் நீ வல்லமை உள்ளவனே! ஆனால் எங்கள் தலைவன் நீ. தலைவனை இம்மாதிரியான காரியத்துக்கு அனுப்புதல் முறையன்று. எங்கேயானும் மரத்தின் வேரை வெட்டுவதுண்டோ? ஆகவே இந்தக் காரியத்துக்குத் தகுதி வாய்ந்த ஒரு நபரை அனுப்பவேண்டும். அது அதோ அந்த அனுமன் தான். அவன் தான் தகுதி வாய்ந்தவன். அவனை அனுப்புவோம்." என்று கூறுகின்றான் ஜாம்பவான். ஜாம்பவானையே அனுமனிடம் சென்று பேசுமாறு அங்கதன் சொல்ல அவ்வாறே ஜாம்பவான் அனுமனிடம் சென்று பேசுகின்றான். "வாயு குமாரனே, வானர வீரனே, ராம காரியத்திற்கு உன் உதவி தேவை!" என்கின்றான் ஜாம்பவான். "என்னால் என்ன செய்ய முடியும்?" என்று அனுமன் கவலைப்பட, ஜாம்பவான் சொல்லுகின்றான். "ஆஞ்சனேயா, கவலைப்படாதே! இந்தக் காரியத்திற்குத் தக்கவன் நீ ஒருவனே ஆகும். உன்னால் தான் இந்த வேலை முற்றிலும் வெற்றியில் முடியப் போகின்றது. அப்பா, மறந்துவிட்டாய் அல்லாவா? உன் பலத்தை? இதோ, நீ சிறு வயதில் மிக்க பலத்துடன் ஏகமாய்க் குறும்புகள் செய்து வந்தாய். யாராலும் உன்னை அடக்கமுடியவில்லை அல்லவா? நீ குழந்தையாய் இருக்கும்போதே பழம் என நினைத்துக் கொண்டு சூரியனைப் பிடிக்கத் தாவினாய். அதனால் கோபம் கொண்ட இந்திரன் உன்னைத் தாக்க வந்தபோது உன் அம்சமும், உனக்கு இந்தப் பலத்தை அருளியவனும் ஆன வாயுதேவன் தன் நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ள மக்கள் உலகில் காற்றே இல்லாமல் தவிக்க, பின்னர் அனைவரின் வேண்டுகோளின் பேரில் வாயு திரும்பி வர, உலகில் காற்று நிலவியது. தேவாதி தேவர்கள் அனைவரும் உனக்குப் பல வரங்களை அளித்தனர்."

பிரம்மா உனக்கு எந்த ஆயுதத்தாலும் மரணம் இல்லை எனவும், நீ விரும்பினால் ஒழிய உனக்கு மரணம் இல்லை எனவும், அறிவிலும், வீரத்திலும், பலத்திலும், மன உறுதியிலும், நற்குணத்திலும், கருணையிலும், சாமர்த்தியத்திலும், அச்சமின்மையிலும் உனக்கு நிகரானவன் ஒருத்தனும் இல்லை. உன்னுடைய பலம் வேறு யாருக்கும் இல்லை. நீ உன் சிறு வயதுக் குறும்பின் காரணத்தால் உனக்கு நினைவூட்டப் படும்போதே உன் பலத்தைப் பற்றி நீ அறிவாய் எனவும் அப்போது உனக்குச் சொல்லப் பட்டது. அப்பனே, அனுமனே, உன் பலம் உனக்குத் தெரியாததா? நீ ராம காரியத்திற்கென்றே பிறந்தவன். சக்கரவர்த்தித் திருமகன் ஆன அந்த ராமனின் தூதன் ஆக, வானரங்களில் மேம்பட்டவன் ஆன நீ போய் இந்தக் கடலைத் தாண்டிச் சென்று சீதையைக் கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும். உன்னால் அது முடியும். நீ ஒருவனே இதற்குத் தகுந்தவன்." என்றெல்லாம் சொல்ல, அனுமனும் தன்னுணர்வு பெற்றுத் தன் பலம் தானே உணரப் பெற்றவன் ஆகின்றான்.
ஆஞ்சநேயன் விஸ்வரூபம் எடுக்கின்றான். அனைவர் மனதிலும் உற்சாகம் பொங்கியது. அப்போது அனுமன், தான் இந்த இடத்தில் இருந்து தாண்டும்போது பூமி தாங்காது எனச் சொல்லி பக்கத்தில் உள்ள மகேந்திர மலைக்குச் சென்றார். சீதையை எவ்வாறேனும் கண்டு பிடித்து விட்டே வருவேன் என்று அனைவரிடமும் உறுதி கூறிவிட்டுக் காலையை ஊன்றினார். மகேந்திர மலையே கிடுகிடுத்தது. மிருகங்களும், பறவைகளும் பயந்து ஓட, பாறைகள் அசைந்து, அதனிடுக்கில் இருந்த பூச்சிகளும், பாம்புகளும் வெளியே வர, பிளந்த பாறைகளில் இருந்து நீர் ஊற்றுக்கள் கிளம்ப, தன்னுடைய காரியமே நினைவாக அனுமன் இலங்கையை மனதில் நினைத்துக் கொண்டு ஒரே தாவு தாவினான்.
*************************************************************************************

அடுத்து சகல நன்மைகளும் தரும் சுந்தர காண்டம் ஆரம்பிக்கின்றது. இதைப் படிக்கின்றவர்களுக்கும், கேட்கின்றவர்களுக்கும் அந்த ஆஞ்சநேயனின் பரிபூரண அருள் கிட்டும். ஆஞ்சநேயனுக்கு அவன் தாய் அஞ்சனை "சுந்தரன்" என்ற பெயரிட்டதாய் ஒரு கூற்று உண்டு. அந்தப் படி பார்த்தாலும், சிரஞ்சீவியான அனுமன் உலகிலேயே முதன்முறையாகத் தூதனாய்ச் சென்று வெற்றி அடைந்தது பற்றிக் கூறும் தகவல்கள் அடங்கியது. மேலும் சீதையின் சிறப்புகளைச் சொல்லுவதும் இந்தக் காண்டத்தில் தான். காணாமல் போயிருந்த சீதையை அனுமன் கண்டெடுத்து ஆனந்திப்பதும், ராமனிடம் சொல்லுவதும் இதில் தான். தன்னலமற்ற சேவை செய்தவன் அனுமன். ராமனிடமிருந்து கணையாழியைச் சீதைக்கு எடுத்துச் சென்று அவள் துக்கத்தைத் தீர்த்த துக்க நிஷ்ட காரகன் அனுமன். சீதை செளகரியமாய் இருக்கின்றாள் என்ற தகவலை ராமனுக்குக் கொடுத்தவன் அனுமன். இந்த உலகிலே நாமெல்லாம் கஷ்டங்களைப் பட்டு அனுபவித்துக் கொண்டு, "இறைவா, காப்பாற்று!" என்று வேண்டிக் கொள்கின்றோம். அத்தகைய இறைவனுக்கும், பிராட்டிக்குமே மனிதர்களாய்ப் பிறந்து வந்த கஷ்டகாலத்தின்போது அவர்களை அந்த இக்கட்டில் இருந்து காத்தவன் அனுமன். இந்த சுந்தரகாண்டப் பாராயணத்தின் மகிமையை உணரத் தான் முடியும். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. சர்வ ரோக நிவாரணியான இந்தச் சுந்தரகாண்டம், தீராத மனக்கஷ்டங்களைத் தீர்த்து வைப்பதோடு, முக்கியமாய்ப் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும். இது அனுபவபூர்வமான உண்மை! இனி வரும் நாட்களில் அனுமனின் வீர, தீர பராக்கிரமத்தைப் பற்றிப் பார்ப்போம்.
கம்பன் பஞ்சபூதங்களையும் பயன்படுத்தி அனுமனைப் பாராட்டுகின்றான். பாராயணத்துக்கும், தனிவழி செல்லுவோர்க்கும் சிறந்த காப்புக் கவசம் ஆன அது:
"அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்."
ஐந்து முறைகள் ஐந்து என்னும் எண்ணைப் பயன்படுத்திக் கம்பர் பஞ்சபூதங்களான காற்று, ஆகாயம், நீர், நிலம், நெருப்பு போன்றவற்றைப் பயன் படுத்திச் சீதையைக் காத்த ஆஞ்சநேயன் நம்மையும் காப்பான் என்கின்றார். வாயு(காற்று) பகவானின் மகன் ஆன ஆஞ்சநேயன், கடலை(நீர்)த் தாண்டி, ஆகாய மார்க்கமாய்ச் சென்று, பூமி(மண்) புத்திரி ஆன சீதையைக் கண்டு பேசி, ராவணனுடைய இலங்கைக்குத் "தீ"யை வைக்கின்றார். அந்த அனுமன் நம்மைக் காப்பான்.
டிஸ்கி: ஜாம்பவானைக் "கரடி" எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாய், மூத்த வானரங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டு விட்டேன். கவனக் குறைவால் ஏற்பட்ட தவறு. சுட்டிக் காட்டிய திவாவுக்கு நன்றி.
சுந்தர காண்டத்தின் ஆரம்பத்தில் ராமனும் சரி, சீதையும் சரி துயரத்தில் அழ்ந்து இருந்தனர்.
ReplyDeleteஇருவருக்கும் அனுமன் தான் மன ஆறுதல் சொல்லி, நம்பிக்கையூட்டி, தைரியத்தை தந்து சுந்தர காண்டத்தின் முடிவில் இருவரும் மன நிறைவோடு ச்மாதானம் அடைந்து காணபடுவர்.
அது போல இந்த சுந்தர காண்டத்தை படிப்பவரும், கேட்பவரும், பின்னூட்டம் இடுபவரும்(சரி தானா கீதா மேடம்?) அவரவர் மனம் விரும்பிய மகிழ்ச்சிகரமான செய்தியை கேட்டு மகிழ்வர் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.
ஜெய் ஷ்ரிராம்! ஜெய் ஆஞ்செனேயா!
சுந்தரகாண்ட பாராயணம் மிகப் பெரிய நிம்மதி தரும்.....இண்டெர் நெட்ல படித்தாலென்ன, புத்தகம் பாராயணம் பண்ணினாலென்ன....
ReplyDeleteகீதாம்மா புண்ணியத்தில் எனக்கும் இன்று இதைப் படிக்க கிடத்தது. மிக்க நன்றிங்கம்மா...