மாரீசனைக் கொன்ற ராமரின் மனதில் இனம் தெரியாத கலக்கம் ஏற்பட்டது. வேகமாய்த் திரும்ப ஆரம்பித்தார். இறக்கும் தருவாயில் மாரீசன் எழுப்பிய ஓலக் குரல் தன் குரலில் இருந்தது, அவரை வேதனைப்படுத்திக் கொண்டே இருந்தது. திரும்பும் வழியில் ஊளையிட்ட நரியின் ஓலமும், மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது. சீதையைத் தனியே விட்டுவிட்டு லட்சுமணன் வந்துவிடப் போகிறானே என எண்ணி வருந்தினார். மிருகங்கள் அனைத்தும் ஓலக் குரல் எழுப்பியதைக் கண்ட அவர் மனம் இன்னும் கவலையுற்றது. அப்போது பதட்டத்துடனும், கலக்கத்துடனும் லட்சுமணன் தன்னை நோக்கிச் சற்றுத் தொலைவில் வருவதை ராமர் கண்டார். ஓடிச் சென்று லட்சுமணனைக் கண்ட ராமர்,"லட்சுமணா, என்ன இது? சீதையைத் தனியே விட்டு விட்டு ஏன் வந்தாய்? அவளை அரக்கர்கள் என்ன செய்தனரோ? நாம் உயிரோடு காண்போமா? இங்கே நான் காணும் தீய சகுனங்களைப் பார்த்தால் என் மனம் பதறுகின்றதே? என்ன நடந்தது?" என்று கேட்டார் ராமர்.
"ஆஹா, என் இடது கண் துடிக்கின்றதே, லட்சுமணா, எங்கே அந்தத் தெய்வ மகள்? என் இதயராணி எங்கே? அவள் இல்லை எனில் நான் எப்படி உயிர் வாழ்வேன்? அவள் இல்லாமல் எனக்கு எந்த சாம்ராஜ்யமும் தேவை இல்லை! சீதை உயிரோடு இல்லை எனில் நானும் உயிர் விடுகின்றேன் லட்சுமணா! கைகேயியாவது மன நிம்மதி அடைவாள்." என்றெல்லாம் புலம்புகின்றார் ராமர். லட்சுமணன் வேறு வழியில்லாமல் ராமரைப் பார்த்து, நடந்ததை எல்லாம் சொல்கின்றான். சீதை தன் மேல் சந்தேகப் பட்டதாலேயே தான் வேறு வழியின்றி அங்கே வர நேர்ந்தது எனவும் கூறுகின்றான். அதிலும் பரதனோடு சேர்ந்து தான் சதி செய்வதாய்ச் சொல்லவே வர நேர்ந்தது என்றும் கூறுகின்றான். ஆனால் ராமரோ லட்சுமணன் செய்தது தவறு என்கின்றார். "சீதை ஆத்திரத்தில் பேசியதை நீ அப்படியே எடுத்துக் கொண்டாயா லட்சுமணா? தவறு உன் மேல் தான். உண்மையில் அவள் அவ்வாறு பேசியதில் நீ கோபம் கொண்டே அவளைத் தனியே விட்டு விட்டு வந்திருக்கின்றாய். என் மனம் இதனால் மகிழ்ச்சி அடையவில்லை லட்சுமணா. என் உத்தரவை மீறி நீ வந்தது சரியில்லை." என்று சொல்லிக் கொண்டே இருவரும் பர்ணசாலையை அடைந்தனர்.
யுத்தம் நடந்த களத்தைப் போல் காட்சி அளித்தது பர்ணசாலை. பொருட்கள் சிதறிக் கிடந்தன. பர்ணசாலையைச் சுற்றி சீதையுடன் விளையாட வரும் மான்களும், பறவைகளும் சோகமாய் இருந்தன. மலர்கள் வாடி இருந்தன. ஒரு வேளை சீதை நீர் கொண்டு வர கோதாவரிக்குச் சென்றிருப்பாளோ என எண்ணீய ராமர் அங்குமிங்கும் ஓடி அவளைத் தேடுகின்றார். மரங்களிடையே தேடுகின்றார். ஒளிந்து விளையாடுகின்றாளோ என குகைகளில் தேடுகின்றார். செடியே, சீதை எங்கே, மரமே சீதை எங்கே, மானே, சீதை எங்கே, பூவே, சீதை எங்கே, மிருகங்களே, சீதை எங்கே, மலைகளே, சீதை எங்கே? வன தேவதைகளே, சீதை எங்கே? எங்கே? எங்கே? எங்கே? என் சீதை எங்கே? பரிதவித்துப் பதறினார் ராமர்.
"சீதை இல்லாமல் ஒருவேளை நான் உயிர்விட்டு மேலுலகம் சென்றால் நம் தந்தையாகிய தசரதச் சக்கரவர்த்தி சீதை இல்லாமல் நீ ஏன் வந்தாய் என்பாரே? சீதா, ஓ, சீதா, நீ இல்லாமல் நான் உயிர் வாழமாட்டேன்!" ஓலமிட்டார் ராமர். லட்சுமணன் பலவகைகளிலும் சமாதானம் செய்கின்றான். "ஆஹா, கைகேயியின் எண்ணம் இதுவோ? அயோத்திமக்கள் சீதையை இழந்த கோழை என்பார்களே என்னை! ஜனக மகாராஜாவிற்கு என்ன பதில் சொல்லுவேன்? லட்சுமணா, உடனே அயோத்தி செல்வாய், தாய்மார்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பரதனை நாட்டை ஆளச் சொல்லுவாய். ஏ, சூரியனே, எங்கே போனாய்? என் சீதையைக் கண்டாயா? நீ அறியாமலா அவள் எங்கோ போய்விட்டாள்?" என்றெல்லாம் கதறினார். சீதையைத் தேடிக் கொண்டு கோதாவரி நதிக்கரைக்குச் சென்ற லட்சுமணன் திரும்பி வந்து அங்கேயும் சீதை இல்லை எனவும், ராமர் செடி, கொடிகள், மரங்கள், மிருகங்கள் என அனைத்திடமும் மீண்டும் புலம்ப, ஒரு இடத்தில் சில மான்கள் நின்று அவரையே பார்த்தன.
ராமர் லட்சுமணரிடம் இந்த மான்கள் ஏதோ செய்தி சொல்லுகின்றனவோ எனக் கேட்டு அவற்றையே பார்த்துக் கொண்டு, ஒரு மானிடம், "சீதை எங்கே?" எனக் கேட்க அந்த மானோ விண்ணை நோக்கி எகிறிக் குதித்துவிட்டுப் பின்னர் தென் திசையை நோக்கி ஓடத் துவங்கின. ராமர் லட்சுமணனிடம், "லட்சுமணா, தென் திசையை இந்த மான்கள் சுட்டுவதால் அதை நோக்கிச் செல்வோம்." எனக் கூறிவிட்டுப் போகின்றார்கள் இருவரும் தென் திசையை நோக்கி. அப்போது ஒரு இடத்தில் சீதையின் காலடிகள் தென்பட்டன. ஒரு பயங்கர ராட்சசன் காலடியும் தென்பட்டது. இவற்றைத் தவிர ஒரு ரதத்தின் பாகங்கள், சில அம்புகள், ஒடிந்த ஒரு வில், அம்புறாத்தூணி போன்றவையும் தென்பட்டது. ஆனால் சீதையைக் காணவில்லை. கோபம் கொண்ட ராமர், "கட்டுப்பாடுடன், தர்மத்தின் வழியில் வாழ நினைக்கும் எனக்கு இத்தகைய கொடிய பாவத்தைச் செய்தவன் யார்? யாராய் இருந்தாலும் அவர்களை அழிப்பேன். மூவுலகையும் ஸ்தம்பிக்க வைக்கின்றேன். சூரியன் தன் ஒளியை இழப்பான், மலைகளை உடைக்கின்றேன், மரங்களைப் பொசுக்கி வனங்களை அழிப்பேன், யாருக்கும் இனி நிம்மதி இருக்கப் போவதில்லை. படைக்கப் பட்டவை அனைத்தும் இப்போது என்னால் அழியப் போகின்றது." என்று சொல்லிவிட்டு, வில், அம்புகளை எடுத்துக் கொண்டு, உதடுகள் துடிக்க, கண்கள் சிவக்க, ஊழிக்காலப் பரமன்போல் பெரும் கோபத்துடன் நின்றார். லட்சுமணன் நிதானம் தவறாமல் அவரைச் சமாதானப் படுத்தினான்.
ராமன் தசரதருக்குப் பிறந்தது முதல் காட்டுக்கு வந்ததும், இப்போது சீதையைப் பிரிந்திருப்பதும் வரை எடுத்துக் கூறிய லட்சுமணன், தர்மத்தின் வசப்பட்டு, அதனால் கடமையை முடிக்க வேண்டி காட்டுக்கு வந்திருக்கும் நீங்கள் இப்படிப் பேசுவது சரியில்லை. அதீத சோகத்தினால் பேசுகின்றீர்கள் என்பதையும் நான் அறிவேன். ஆராயாமல் பிறருக்கு நாம் துன்பத்தை விளைவிக்கக் கூடாது அல்லவா? வாருங்கள், இந்த ஜனஸ்தானம் பூராவும் தேடுவோம். பின்னர் சீதை போனவழி எவ்வாறு எனத் தெரிந்து கொண்டு, அவளைக்கவர்ந்து சென்றவர்கள் இருந்தால் அவர்களை வேரோடு அழிப்போம்." எனக் கூற அதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட ராமர் அவ்வாறே ஜனஸ்தானம் பூராவும் லட்சுமணனுடன் தேடுகின்றார். சீதை எங்கும் காணவில்லை. ஓரிடத்தில் கழுகரசன் ஆன ஜடாயு பெரும் ரத்த வெள்ளத்தில் பெருமூச்சு வாங்கிக் கொண்டு மூச்சு விட முடியாமல் படுத்திருப்பதைக் கண்ட ராமர், யாரோ அரக்கன் தான் கழுகரசன் வடிவிலே வந்து சீதையைச் சாப்பிட்டிருக்கின்றான் என நினைத்து, கடும் கோபத்துடன், பூமி அதிர, வில்லும், அம்பும் எடுத்துக் கொண்டு, ஜடாயுவை நோக்கிச் செல்கின்றார்.
ஜடாயு, ராமர் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தது.
அக்கா.. பெரிய பெரிய பத்தியா பிரிச்சு எழுதியிருந்தாலும் என்னிய மாதிரி சின்னப்பசங்க பாக்கறதுதுக்கு ராமாயணம் குழந்தை ஸ்டெயில் போட்டோல்லாம் போட்டதுக்கு தாங்க்ஸு:)
ReplyDeleteஇன்னும் சின்ன சின்ன பத்திகளாய் பிரிச்சிருக்கலாமோ?
சாதாரணமா பொங்கறது இலக்குவன். ராமர் சமாதானப்படுத்துவார்.
ReplyDeleteஇப்ப தலைகீழா போச்சு!