
பின்னர் ராமரைக் கிஷ்கிந்தைக்குச் சென்று சுக்ரீவனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்குமாறு அனுமன் வேண்ட, ராமன் அதை மறுக்கின்றார். தகப்பன் கட்டளையை ஏற்றுத் தான் வனவாசம் வந்திருக்கும் வேளையில் நகருக்குள் நுழைவதோ, இம்மாதிரியான கொண்டாட்டங்களில் பங்கேற்பதோ, ஏற்றுக் கொண்ட பிரதிக்ஞைக்கு மாறானது என்று சொல்லி மறுக்கின்றார். வானர வீரர்களுடனும், அனுமனுடனும், சுக்ரீவன் கிஷ்கிந்தைக்குச் சென்று முடிசூட்டிக் கொள்ளட்டும் என்று சொல்லி விட்டு, மழைக்காலம் வந்துவிட்டபடியால், தாம் லட்சுமணனுடன் இந்தக் காட்டிலேயே ஒரு குகையில் தங்குவதாயும், மழைக்காலம் முடிந்த பின்னர் மேற்கொண்டு என்ன செய்யலாம் என ஆலோசிக்கலாம் எனவும் சொல்லி அவர்களை அனுப்புகின்றார். அதன்படிக்குக் கிஷ்கிந்தை சென்ற சுக்ரீவன் முடிசூட்டிக் கொண்டு தன் மனைவியான ருமையோடு கூடி ஆட்சி, அரச போகத்தை அனுபவிக்கத் தொடங்குகின்றான்.
இங்கே காட்டில் ஒரு குகையைத் தேர்ந்தெடுத்து அதில் தங்கும் ராமருக்குச் சீதையின் நினைவுகள் வந்து துன்புறுத்துகின்றன. மேலும் சுக்ரீவன் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவானா என்ற எண்ணமும் வந்து அலை மோதுகின்றது. லட்சுமணன் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி சுக்ரீவனைத் தாராளமாய் நம்பலாம் எனக் கூற ராமர் கூறுகின்றார்: "நான் என் மனைவியைப் பிரிந்து இருக்கின்றேன். ஆனால் சுக்ரீவனோ வெகுநாட்கள் கழித்து மனைவியோடு சேர்ந்திருக்கின்றான். இப்போது நாம் அவனைத் தொந்தரவு செய்வதும் நியாயமில்லை. இந்த மழைக்காலம் முடிந்ததும் அவனே இறங்கி வந்து நமக்கு உதவி செய்வான் என்று நம்புகிறேன்." என்று தன் மனதையும் தானே சமாதானம் செய்து கொண்டார். மழைக்காலமும் முடிந்தது. கிஷ்கிந்தையில் போகத்தில் மூழ்கி இருந்த சுக்ரீவனைக் கண்ட அனுமன், அவனுக்குச் செய்ய வேண்டிய கடமை இருப்பதை நினைவூட்டுகின்றார். ராமர் திரும்ப வந்து கேட்கும்வரை காத்திருக்கக் கூடாது எனவும், சீதையைத் தேட ஏற்பாடுகள் செய்யுமாறும் அறிவுறுத்துகின்றார். அதை ஒப்புக் கொண்ட சுக்ரீவனும் தன் தளபதியான நீலனை அழைத்துப் படைகளை ஒருங்கே கொண்டு வந்து சேர்க்குமாறு கட்டளை இடுகின்றான். அன்றிலிருந்து பதினைந்து இரவுகள் செல்வதற்குள் அனைத்து வானர வீரர்களும் அங்கே வந்து சேர்ந்திருக்கவேண்டும் எனவும் ஆணை இடுகின்றான்.

பின்னர் அங்கதனை அனுப்பிச் சகல மரியாதைகளுடனும், லட்சுமணனை அழைத்துவரச் சொல்ல அவனும் அவ்வாறே சென்று அழைத்து வருகின்றான். நகரின் கோலகலங்களாலும், வானரப் பெண்கள் எழுப்பிய சப்தங்களாலும் கோபம் கொண்ட லட்சுமணன் வில்லின் நாணோசையை எழுப்ப கிஷ்கிந்தையே அதிர்ந்தது. சுக்ரீவன் இன்னும் பயம் கொண்டு தாரையைப் பார்த்து இப்போது என்ன செய்வது? நான் எந்தத் தவறும் செய்யாமல் இருக்கும்போதே லட்சுமணன் இவ்வளவு கோபத்துடன் வந்திருக்கின்றானே எனச் சொல்லித் தாரையை முதலில் சென்று லட்சுமணனைப் பார்த்துக்கோபத்தைத் தணிக்கச் சொல்கின்றான். தாரை மிக புத்திசாலியும், எந்த சமயத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது அறிந்தவளாயும் இருப்பதாலேயே அவளைப் போகச் சொல்கின்றான். தாரையோ எனில் அந்தச் சமயம் அவளும் குடிமயக்கத்திலேயே இருந்தாள். கண்கள் செருகி, ஆடை விலகி, ஆபரணங்கள் நழுவிய கோலத்தில் அவளைக் கண்ட லட்சுமணன் குனிந்த தலை நிமிரவில்லை. அவள் லட்சுமணன் கோபத்தின் காரணம் கேட்க சுக்ரீவன் ஆட்சி சுகத்தில் தங்கள் வேலையை மறந்துவிட்டதாய்க் கூறு அவனைத் தூற்றுகின்றான் லட்சுமணன். அதி புத்திசாலி ஆன உன்னையும் இப்போது அவன் மணந்த பின்னரும் இவ்வாறு அவன் நட்புக்குத் துரோகம் இழைக்கலாமா எனக் கேட்கின்றான். தாரை அவனிடம் சொல்கின்றாள்: "வீரரே, அவ்வாறில்லை. ஏற்கெனவே சுக்ரீவன் வீரர்களை நாலாபுறத்திலும் அனுப்பி இங்கே திரட்டிக் கொண்டிருக்கின்றார். பல மலைப் பிரதேசங்களைச் சேர்ந்த நினைத்தபோது நினைத்த உருவம் எடுக்கும் வல்லமை படைத்த பல வானர வீரர்கள் இங்கே வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றனர். இப்போது நீர் உள்ளே வந்து எம் அரசனை கண்டு பேசுவீராக!" என அழைக்க உள்ளே சென்ற லட்சுமணன், குடிபோதையில் மனைவிமார்கள் புடைசூழ இருந்த சுக்ரீவனைக் கண்டு கோபம் அடைந்தான். சுக்ரீவனோ இருகையும்கூப்பிக் கொண்டு லட்சுமணனைத் தொழுது தலை குனிந்து நின்றான்.
No comments:
Post a Comment