
ராவணன் சபையில் அமரவைக்கப்படாமல் கட்டப் பட்ட நிலையிலேயே அனுமன் பேசியதாய் வால்மீகி குறிப்பிடுகின்றார். வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு உட்காருவது எல்லாம் பின்னால் வந்திருக்கின்றது என நினைக்கின்றேன். ராவணனும் நேரிடையாக அனுமனைக் கேள்விகள் கேட்கவில்லை, தன் அமைச்சன் ஆகிய பிரஹஸ்தனை விட்டே கேட்கச் சொல்லுகின்றான். கம்பர், ராவணனும், அனுமனும் நேரிடையாகப் பேசிக் கொண்டதாய் எழுதி இருக்கின்றார். இனி, பிரஹஸ்தனின் கேள்விகளும், அனுமனின் பதில்களும்: "ஏ, வானரனே, உனக்கு நலம் உண்டாகட்டும், நீ யாரால் அனுப்பப் பட்டவன்? தேவேந்திரனா, குபேரனா, வருணனா, அந்த மகாவிஷ்ணுவா, பிரமனா? யார் அனுப்பி இருந்தாலும் உள்ளது உள்ளபடிக்கு உண்மையைச் சொல்லிவிடு, உருவத்தில் வானரன் ஆன உன் சக்தி பிரம்மாண்டமாய் இருக்கின்றது. சாதாரண வானர சக்தி இல்லை இது. பொய் சொல்லாதே!" என்று கேட்க, அனுமன் நேரிடையாக ராவணனைப் பார்த்தே மறுமொழி சொல்லத் தொடங்குகின்றார். "நான் ஒரு வானரன், நீங்கள் கூறிய தேவர்கள் யாரும் என்னை அனுப்பவில்லை. ராவணனைப் பார்க்கவேண்டியே நான் வந்தேன். அரக்கர்களின் தலைவன் ஆகிய ராவணனைப் பார்க்கவேண்டியே அசோகவனத்தை அழித்தேன். அரக்கர்கள் கூட்டமாய் வந்து என்னைத் தாக்கியதால், என்னைத் தற்காத்துக் கொள்ளும்பொருட்டு, நான் திரும்பத் தாக்கியதில் அவர்கள் அழிந்து விட்டனர். என்னை எந்த ஆயுதங்களாலும் கட்டுப்படுத்த முடியாது. பிரம்மாஸ்திரத்துக்கு நான் கட்டுப்பட்டதுக்குக் கூட ராவணனைப் பார்க்கவேண்டும் என்பதாலேயே. இப்போது அதில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன், எனினும், நான் அரக்கர் தலைவன் ஆன உன்னைப் பார்க்கவே இவ்வாறு கட்டுப்பட்டது போல் வந்துள்ளேன். ராம காரியமாய் வந்திருக்கும் நான் அவருடைய தூதனாக உன் முன்னிலையில் வந்துள்ளேன் என்பதை அறிவாயாக!" என்று கூறினார்.
பின்னர் தன் வானரத் தலைவன் ஆன சுக்ரீவனின் வேண்டுகோளின் பேரிலேயே தான் ராமனின் காரியமாக அவரின் தூதுவனாக அவர் கொடுத்த தகவலைத் தாங்கி வந்திருப்பதாய்த் தெரிவிக்கும் அனுமன், சுக்ரீவன் ராவணனின் நலன் விசாரித்துவிட்டு, ராவணனுக்கு நற்போதனைகள் சொல்லி அனுப்பி இருப்பதாயும், அதைக் கேட்குமாறும் கூறுகின்றார். இப்படிக் கூறிவிட்டு, தசரத மகாராஜாவுக்கு, ராமன் பிறந்ததில் இருந்து ஆரம்பித்துக் காட்டுக்கு வந்தது, வனத்தில் சீதையை இழந்தது, சுக்ரீவனோடு ஏற்பட்ட நட்பு, வாலி வதம், சீதையைத் தேட சுக்ரீவன் வானரப் படையை ஏவியது, அந்தப் படைகளில் ஒரு வீரன் ஆன தான் கடல் தாண்டி வந்து சீதையைக் கண்டது வரை விவரித்தார். பின்னர் மேலும் சொல்கின்றார்:" ராவணா, உனக்கு அழிவு காலம் வந்துவிட்டது. ராம, லட்சுமணர்களுடைய அம்புகளின் பலத்தைத் தாங்கக் கூடிய அரக்கர்கள் எவரும் இல்லை. ராமருக்குத் தீங்கு இழைத்துவிட்டு அரக்கன் எவனும் இந்தப் பூமியில் நிம்மதியாய் வாழமுடியாது. ஜனஸ்தானத்தில் அரக்கர்கள் கதியை நினைத்துப் பார்ப்பாய். வாலியின் வதத்தை நினைத்துப் பார். சீதையை ராமனுடன் அனுப்பி வைப்பது தான் சிறந்தது. இந்த நகரையோ, உன் வீரர்களையோ, படைகளையோ அழிப்பது என் ஒருவனாலேயே முடியும். எனினும் ராமரின் விருப்பம் அதுவல்ல, சீதையைக் கடத்தியவனையும், அவனைச் சார்ந்தவர்களையும் தம் கையால் அழிக்கவேண்டும் என்பதே அவர் விருப்பம். அவ்வாறே சபதம் இட்டிருக்கின்றார். அதை நிறைவேற்றியே தீருவார். இந்த உலகத்தின் அழிவுக்கே காரணம் ஆன காலனின் துணையான காலராத்திரி போன்ற சீதையை விட்டு விலகினாய் ஆனால் உனக்கே நன்மைகள். இல்லை எனில் இந்த உன் இலங்கைக்கும், உன் குலத்துக்கும் அழிவுக்கு நீயே காரணம் ஆவாய்." என்று சொல்லி நிறுத்த அனுமனைக் கொல்லச் சொல்லிக் கட்டளை இடுகின்றான் ராவணன்.

அனுமன் தனக்கு நேரிடும் இந்த அவமானத்தை ராமனின் காரியம் ஜெயம் ஆகவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவராய்ப் பொறுத்துக் கொள்கின்றார். மேலும் நகர்வலம் வருவதன் மூலம் இலங்கையின் அமைப்பைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் எனவும் நினைத்துக் கொள்கின்றார். சங்குகள் ஊதப்பட்டு, முரசம் பலமாகக் கொட்டப் பட்டு, தூதுவனுக்குத் தண்டனை வழங்கப்படுவது உறுதி செய்யப் படுகின்றது. வாலில் தீ வைக்கப் பட்ட அனுமன் நகரின் பல வீதிகளிலும் இழுத்துச் செல்லப் படுகின்றார். நகரின் தெருக்களின் அமைப்பையும், நாற்சந்திகள் நிறுவப்பட்டிருந்த கோணங்களையும் அனுமன் நன்கு கவனித்துக் கொள்கின்றார். சீதைக்கு அரக்கிகள் விஷயத்தைத் தெரிவிக்கின்றனர். அனுமன் வாலில் தீ வைக்கப் பட்ட விஷயத்தை அறிந்த சீதை மனம் மிகவும் நொந்துபோய்த் துக்கத்தில் ஆழ்ந்தாள். உடனேயே மனதில் அக்னியை நினைத்து வணங்கினாள்:"ஏ, அக்னி பகவானே, ராமன் நினைப்பு மட்டுமே என் மனதில் இருக்கின்றது என்பது உண்மையானால், கணவன் பணிவிடையில் நான் சிறந்திருந்தது உண்மையானால், விரதங்களை நான் கடைப்பிடித்தது உண்மையானால், இன்னமும் ராமர் மனதில் நானும், என் மனதில் ராமர் மட்டுமேயும் இருப்பது உண்மையானால், அனுமனிடம் குளுமையைக் காட்டு. சுக்ரீவன் எடுத்த காரியம் வெற்றி அடையுமெனில் ஏ, அக்னியே, குளுமையைக் காட்டு." எனப் பிரார்த்தித்தாள் சீதை.

அனுமன், கட்டிடங்களின் மீதும், மாளிகைகளின் மீதும் தாவி ஏறி, தனது வாலில் இருந்த தீயை அந்தக் கட்டிடங்களின் மீது வைத்தார். ப்ரஹஸ்தன், மஹாபார்ச்வன், சுகன், சரணன், இந்திரஜித், ஜம்புமாலி, சுமாலி, ரச்மகேது, சூர்யசத்ரு, ரோமசன், கரலன்,விசாலன், கும்பகர்ணன், போன்றவர்களின் மாளிகைக்கெல்லாம் தீ வைத்த அனுமன் விபீஷணன் மாளிகையை மட்டும் விட்டு வைக்கின்றார்.ராவணனின் மாளிகையைக் கண்டறிந்து கொண்டு அதற்கும் பல இடங்களில் தீவைக்கின்றார். தீ நகரம் பூராப் பரவ வசதியாக வாயு தேவன் உதவினான். மாட, மாளிகைகள்,கூட கோபுரங்கள் தீயினால் அழிந்தன. அரக்கர்கள் கதற, அங்கே சேமிக்கப் பட்டிருந்த நவரத்தினங்கள் தீயினால் உருகி ஓர் பெரிய ஆறாக உருவெடுத்து ஓட ஆரம்பித்தது. திரிகூட மலை உச்சியிலும் அனுமன் தீயை வைக்க நகரையே தீ சூழ்ந்து கொண்டது. எங்கு பார்த்தாலும், அழுகை, கூக்குரல், முப்புரம் எரித்த அந்த ஈசனே வந்துவிட்டானோ என்ற ஐயம் அனைவர் மனதிலும் எழ, அனுமன் மனதிலும் இரக்கம் தோன்றுகின்றது. தான் செய்தது தப்போ என்ற எண்ணம் அவரை வாட்டி வதைக்கின்றது. வானரபுத்தியால் ராம,லட்சுமணர்களின் கீர்த்திக்குத் தான் அபகீர்த்தி விளைவித்துவிட்டதாய் எண்ணுகின்றார் அனுமன். அவர்கள் முகத்தில் எவ்வாறு விழிப்பேன் என எண்ணி மயங்குகின்றார். அனைவரும் தவறாய் எண்ணும்படிப் பேரழிவைப் புரிந்துவிட்டேனோ என எண்ணித் துயர் உறும் அனுமன் மனம் மகிழும் வகையில் நற்சகுனங்கள் தோன்றுகின்றன.விண்ணில் இருந்து சில முனிவர்களும், சித்த புருஷர்களும், இவ்வளவு பெரிய தீங்கு ஏற்பட்டபோதிலும் சீதை இருக்கும் அசோகவனத்துக்கு எந்த அழிவும் உண்டாகவில்லை என மகிழ்வுடன் பேசுவதையும் கேட்டார். உடனேயே அசோகவனம் விரைந்து சென்று சீதையைக் கண்ட அனுமன் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் பல கூறி அவளிடம் விடைபெற்றார்.
No comments:
Post a Comment