

ராம, லட்சுமணர்களை நெருங்கி அவர்களை வணங்கிய அனுமன், ரிஷிகள் போல் மரவுரி தரித்து, ஆனால் பூரண ஆயுதங்களோடு நீங்கள் இருவரும் இந்தக் காட்டில் வருகை புரிந்ததின் நோக்கம் என்ன? இந்தக் காட்டைப் பாதுகாக்க சூரிய, சந்திரர்கள் போல் நீங்கள் இருவரும் வந்துள்ளீர்களோ? அல்லது விண்ணிலிருந்து சூரிய, சந்திரரே இறங்கி விட்டனரா?" என விசாரிக்கின்றார். இருவரும் பேசாமல் இருப்பது கண்டு மேலும் சொல்லுவார்:" வானர அரசன் ஆகிய சுக்ரீவன், என் அரசன், நான் அவன் நண்பன், அமைச்சன், நானும் ஒரு வானரனே. என் அரசனை அவன் அண்ணன் ஆகிய வாலி, நாட்டை விட்டுத் துரத்தி விட்டான். ஆகவே என் அரசனாகிய சுக்ரீவனுடன் நாங்கள் இங்கே வாழ்ந்து வருகின்றோம். அவர் அனுப்பியே நான் இங்கே வந்தேன். எங்களுக்கு நினைத்த போது நினைத்த உருவை எடுக்க முடியும். என் அரசனை உங்கள் நண்பனாய் ஏற்றுக் கொள்ளுங்கள்." என்று சொல்கின்றார். உடனே ராமர் லட்சுமணனைப் பார்த்து, நாம் தேடி வந்திருக்கும் சுக்ரீவனின் அமைச்சரும், நண்பரும் ஆன இந்த அனுமனின் சொல் வல்லமையைப் பார்த்தாயா? என வியந்து பேச, லட்சுமணனும், அனுமனிடம் தாங்கள் சுக்ரீவனையே தேடி வந்திருப்பதாய்ச் சொல்ல, அனுமன் அவர்கள் வந்த காரணத்தைக் கேட்கின்றார். லட்சுமணன், மீண்டும் ஒரு முறை ராமர் பட்டம் துறந்து காட்டுக்கு வந்தது முதல் சீதை அபகரிக்கப் பட்டது வரை அனைத்தும் சொல்லி முடிக்கின்றான். கபந்தன் சுக்ரீவனைப் பற்றிக்கூறியதாயும் சொல்லிவிட்டு, ராமர் சுக்ரீவனின் நட்பை வேண்டி வந்திருப்பதாயும் கூறுகின்றான். உடனே மன மகிழ்ச்சி கொண்ட அனுமன், ராம, லட்சுமணர்களைத் தன் தோளில் சுமந்து கொண்டு சுக்ரீவன் இருக்குமிடம் நோக்கிச் சென்றான். அங்கே சுக்ரீவனின் முன்னிலையை அடைந்ததும், அனுமன் ராம, லட்சுமணர்களைப் பற்றி எடுத்துச் சொல்ல, தன் நிலையையும், தான் அண்ணனால் துரத்தப்பட்டு வந்திரூப்பதையும் சுக்ரீவ்ன் எடுத்துக் கூறுகின்றான். தன் மனைவியும் வாலியினால் அபகரிக்கப் பட்டதையும் சுக்ரீவன் எடுத்துச் சொல்லுகின்றான். ராமர் வாலியை அழித்து, சுக்ரீவன் இழந்த ராஜ்யத்தை மீட்டுத் தருவதாய் உறுதி கூற, ராமனுக்கும், சுக்ரீவனுக்கும் இடையே நட்பு உறுதி செய்யப் பட்டது. அதே நேரத்தில், கிஷ்கிந்தையில் வாலிக்கும், இலங்கையில் ராவணனுக்கும், சீதைக்கும் ஒரே சமயத்தில் அவர்களுடைய இடது கண் துடிக்கின்றது. அன்றலர்ந்த தாமரை போன்ற சீதையின் கண்களில் இடது கண்ணும், தங்கம் போல் ஜொலிக்கும் வாலியின் இடது கண்ணும், பிரளய கால நெருப்புப் போன்ற ஜொலிப்புடன் கூடிய ராவணனின் இடது கண்ணும் துடித்தனவாம். பெண்களின் இடதுகண்கள் துடித்தால் நன்மை பயக்கும், என்றும் ஆண்களின் இடது கண்கள் துடித்தால் தீமை எனவும் நிமித்தங்கள் கூறுகின்றன.
அப்போது சுக்ரீவன் மேலும் ராமனிடம் கூறுவான்:" ராமா, உன் மனைவியை ராவணன் கடத்திச் செல்லும்போது நான் அவர்களைப் பார்த்தேன் என்று தான் நினைக்கின்றேன். ராமா, லட்சுமணா, என்று கதறிக் கொண்டே அந்தப் பெண் ராவணன் கையிலிருந்து தன்னை விடுவிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். மலையின் மீது நானும், இன்னும் சில வானரங்களும் இருப்பதைப் பார்த்துவிட்டு ஒரு சிறு மூட்டையையும், இன்னும் சில நகைகளையும் எங்களை நோக்கி வீசினாள். அவற்றை நாங்கள் எடுத்துப் பத்திரமாய் வைத்துள்ளோம். இவை சீதையின் நகைகளா எனப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்." என்று சொல்லவே, சுக்ரீவன் மீண்டும் குகையினுள்ளே சென்று, ஒரு மூட்டையைக் கொணர்ந்து ராமனிடம் கொடுக்க அதைப் பார்த்த ராமன் மீண்டும் கதறி அழுதான். பின்னர் லட்சுமணனைப் பார்த்து அரக்கனால் கவர்ந்து செல்லப் பட்ட சீதை இவற்றை வீசி எறிந்திருக்கின்றாள் என்று கூறுகின்றார். லட்சுமணனோ, என்னால் கால் கொலுசுகளைத் தவிர, மற்றவற்றை அடையாளம் காணமுடியவில்லை எனச் சொல்கின்றான். அபின்னர் ராமன் சுக்ரீவனைப் பார்த்து, சீதை எந்தத் தேசத்தில் சிறை இருக்கின்றாள்? யார் அவன்? எங்கே உள்ளான்? என்ற விபரம் கேட்க,சுக்ரீவன், ராமரை ஆறுதல் வார்த்தைகளினால் சமாதானம் செய்கின்றான். பின்னர் ராமர் அவனின் அண்ணன் எந்தக் காரணத்துக்காக சுக்ரீவனைத் துரத்தினான் எனக் கேட்கத் தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கின்றான் சுக்ரீவன்.

கிஷ்கிந்தை வந்த சுக்ரீவன் வாயே திறக்கவில்லை. எனினும் மந்திரி, பிரதானிகள் விஷயத்தை அறிந்து கொண்டனர். பின்னர் ஆலோசனைகள் பலவும் செய்துவிட்டு சுக்ரீவனுக்கு முடிசூட்டுகின்றனர் வலுக்கட்டாயமாய். சுக்ரீவனின் ஆட்சி நடக்கும்போது ஒரு நாள் திடீரென வாலி திரும்பி விடுகின்றான். மனம் மகிழ்ந்த சுக்ரீவன் அண்ணனை மகிழ்வோடு வரவேற்கின்றான். நடந்ததைச் சொல்கின்றான். தான் மகுடம் சூட இஷ்டப் படவில்லை என்றும், மந்திரி, பிரதானிகளால் பட்டம் கட்டப் பட்டதையும் சொல்கின்றான். தன் மீது கோபம் கொள்ளவேண்டாம் எனவும் சொல்கின்றான். இதை ஏற்காத வாலி, சுக்ரீவனைச் சந்தேகம் கொண்டு கடுமையாகவும், கொடுமையாகவும் திட்டுகின்றான். தன்னால் கொல்லப் பட்ட மாயாவியின் ரத்தத்தினால் அந்தப் பள்ளம் நிரம்பித் தான் வெளியேற வழி இல்லாமல், தவித்ததையும், பள்ளம் மூடப் பட்டிருந்ததையும் சொல்கின்றான். சுக்ரீவனைக் கூவிக் கூவி அழைத்தும் பலனில்லாமல் போனதையும் சொல்கின்றான். ராஜ்யத்தை அடையவே சுக்ரீவன் இவ்வாறு செய்ததாயும் சொல்கின்றான். பின்னர் கட்டிய துணியோடு சுக்ரீவனை நாடு கடத்தினான். எங்கும் தங்க இடமின்றி அலைந்த சுக்ரீவன், வாலியினால் நுழைய முடியாத இந்த ரிஷ்யமுக மலையைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்க ஆரம்பித்ததாயும் சொல்கின்றான். தனக்கு உதவி செய்யுமாறும் ராமனிடம் வேண்டுகின்றான். ராமனும் அவ்வாறே வாலியை அழித்து சுக்ரீவனுக்கு உதவுவதாய் வாக்களிக்கின்றார். இனி கிஷ்கிந்தா காண்டம் நாளையில் இருந்து ஆரம்பிக்கின்றது.
/லட்சுமணனோ, என்னால் கால் கொலுசுகளைத் தவிர, மற்றவற்றை அடையாளம் காணமுடியவில்லை எனச் சொல்கின்றான். //
ReplyDeleteஇதில் உள்ள nuance ஐ சொல்லி இருக்கலாமே!
அட சரியாக சுந்தர காண்டம் பதிவு போடும் போது சென்னை வந்து விடுவேன். மிக அருமையாக எழுதுகிறீர்கள். படங்களும் தூள்.
ReplyDelete